இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. நிக்கோல்ஸ் 46 ரன்களுடனும், டேவன் கான்வே 136 ரன்களுடனும் களத்தில் நின்றிருந்தனர்.இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நிக்கோல்ஸ் அரைசதம் அடித்து 61 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வாட்லிங் (1), கிராண்ட்ஹோம் (0), சான்ட்னெர் (0), ஜேமிசன் (9), டிம் சவுத்தி (8) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ஒருபக்கம் 6 விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கான்வே நம்பிக்கையுடன் விளையாடி இரட்டை சதம் நோக்கி நகர்ந்தார். கடைசி விக்கெட்டாக நீல் வாக்னர் களம் இறங்கினார். அப்போது கான்வே 186 ரன்கள் எடுத்திருந்தார்.
194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்சர் விளாசி அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்தார். அவர் 347 பந்தில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். ஆனால் அடுத்த ஓவரில் ரன்அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.கான்வே சரியாக 200 ரன்கள் எடுத்தார். நீல் வாக்னர் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.