தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். ‘வீட்டுக்குவந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ முதலான படங்களில் பாடியிருந்தாலும் ‘தீர்க்கசுமங்கலி’ படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது. வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது . இதையடுத்து, வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் இந்த வழக்கு சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வாணி ஜெயராமின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *