மாநிலத்துக்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு வகுப்பெடுத்த ஒரே முதல்-அமைச்சர் நம் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா சென்னையில் நடந்தது. இக்கருத்தரங்களில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- கலைஞர் இன்னும் நம்முடனேயே இருக்கிறார் என்ற எண்ணம் தான் எனக்கு உள்ளது. அவரின் எண்ணங்கள் தான் நம்மை எல்லாம் வழிநடத்தி செல்வதாக உணர்கிறேன். ஒரு தாத்தாவாக அவர் எங்களுக்கு நேரம் தந்ததை விட ஒரு தலைவராக நம் அனைவருக்காகவும் நேரம் ஒதுக்கி தந்திருக்கிறார். மிகப்பெரிய ஆளுமைகள் தொடங்கி சாமானிய மனிதர்கள் வரை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய நேரத்தை ஒதுக்கித்தந்துள்ளார். பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகளுடன், எளிய மக்களுடன் அவர் நேரடியாக உரையாடி இருக்கிறார். அவர்களுக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த சந்திப்புகள், உரையாடல்கள் தான் அவரை ஏகப்பட்ட சமூக நீதித் திட்டங்களை தீட்ட வைத்தன. அதன் மூலமாக கோடிக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் போன்றோரின் எழுத்துகள், சாதனைகள் அனைத்தும் நம் கையில் உள்ளன. கூடுதலாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் நம் தலைவரின் சாதனைகளும் உள்ளன. நம் கொள்கைகளை, நம் சாதனைகளை மக்கள் மொழியில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் நம் வேலை. இது பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் போன்றோர் உருவாக்கிய திராவிட பூமி. நம் முதல்-அமைச்சர் வழிநடத்தும் சுயமரியாதை மண் என்பதை தொடர்ந்து காக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறி இந்த பாசறை கூட்டத்தையும், இந்த கருத்தரங்கையும் தொடங்கி வைக்கும் வாய்ப்பை வழங்கிய முதல்-அமைச்சர் கழக தலைவருக்கு நன்றி. அது என்ன திராவிட மாடல் ஆட்சி. அதற்கு சிறிய விளக்கம் மட்டும் சொல்லுங்கள் என்று பலபேர் கேட்கிறார்கள். 10 நாட்கள் முன்பு நம் பிரதமர் சென்னை வந்திருந்தார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே இது தான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று மோடிக்கே தைரியமாக வகுப்பெடுத்தவர் தான் நம் முதல்-அமைச்சர். அதேபோல் நம் மாநிலத்துக்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை அவருக்கு வகுப்பெடுத்த இந்தியாவிலேயே ஒரே முதல்-அமைச்சர் என்றால் அது நம் கலைஞர் வழியில் வந்த நம் தலைவர் தான். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்று பெயர் எடுத்திருக்கிறார். நான் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக இருப்பது போதாது. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என்று தலைவர் சொல்லி இருக்கிறார். அதற்காக அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து உழைக்கிறார்கள். இளைஞர் அணி நிர்வாகிகளாகிய நாம் நம் பணிகளை இவர்களோடு ஒருங்கிணைந்து நம் கழக பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை அந்தப் படம் கூடுதலாக பாதித்தது என தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 174 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபாய் 56 காசுகளாக உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்றார். விலை உயர்த்தப்பட்ட பிறகும், நாங்கள் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.இந்நிலையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை ஆளும் மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்று அவர் எச்சரித்தார். ரஷிவுடன் 30 சதவீத மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் ஷபாஸ் ஷெரீப் அரசு அதை தொடரவில்லை என்றும் கூறினார். ஆனால் அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா, ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணையை வாங்குவதன் மூலம் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை-மாலத்தீவு

இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.ஆனால் மாலத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது’ என்று கூறினார்.இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.

டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோசின் தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதோடு, ராமோசை தினமும் அவரது தாய் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.இதனால் தாயிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்த ராமோசுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வந்தார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 18 வயது நிரம்பியதும், சேகரித்து வைத்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.

விரைவில் இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் நிறைவேற்றப்படும் – பிரதமா் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.சட்ட திருத்த மசோதா குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் 21-வது சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின் வெளியான அறிக்கையில், 21-வது சட்ட திருத்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒருமித்த கருத்து கூட்டத்தில் எட்டப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.எனவே அடுத்த மாதம் 3-ந் தேதி மீண்டும் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அரசியலமைப்பின் 21-வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டதில் மகிழ்ச்சி” என்று பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தனது டுவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.21-வது திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

இந்தியாவில் ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தையைப் பயணிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.ராஞ்சி- ஐதராபாத் விமானத்தில் கடந்த மே 9-ம் தேதி சிறுவன் ஏறுவதற்கு இண்டிகோ நிறுவனத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. சிறுவன் அச்சத்தில் இருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுத்ததாகவும், இதனால் சிறுவனின் பெற்றோரும் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் எனவும் முடிவு செய்ததாக இண்டிகோ நிறுவனம் கூறியது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஜிசிஏ கடந்த மே 9ம் தேதி 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.இதுகுறித்து டிஜிசிஏ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இண்டிகோ ஊழியர்களால் சிறப்புக் குழந்தையைக் கையாள்வதில் ஏற்பட்ட குறைபாட்டால் நிலைமையை மோசமாக்கியது. மிகவும் இரக்கமான செயலால் குழந்தையை அமைதிப்படுத்தி, தீவிர நடவடிக்கையின் அவசியத்தைத் தவிர்த்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.சிறப்பு சூழ்நிலைகள் அசாதாரணமான பதில்களுக்குத் தகுதியானவை. ஆனால் விமானத்தின் ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட தவறிவிட்டதாகவும் கூறினர். இந்நிலையில், இதைக் கருத்தில் கொண்டு டிஜிசிஏ-வில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரம் சம்பந்தப்பட்ட விமான விதிகளின் கீழ் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ அறிவித்துள்ளது.

அப்பா நலமாக உள்ளார்- நடிகர் சிம்பு அறிக்கை

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர் டி.ராஜேந்தர் . இவர் நடிகர் சிம்புவின் தந்தையாவார்.நேற்று முந்தினம் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். என தகவல் வெளியானது. அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.   Most courageous man #TRajendar sir .. he is super positive man .. our prayers for his speedy recovery brother @SilambarasanTR_ https://t.co/3SnwSRDpk5 — Obeli.N.Krishna (@nameis_krishna) May 24, 2022

தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. என்றாலும் மக்களின் துயரம் நீங்குவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று நிபுணர்கள் கணித்து உள்ளனர்.இதற்கிடையே, இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜோசப் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளது. நிவாரணப் பொருட்களை பார்சல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பார்சலில் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்று அச்சிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன.அதன் பிறகு மீண்டும் 22-ந்தேதி 2-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

விடுதலையான பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதலமைச்சர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் விருந்தினர் அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 05.00 மணியளவில் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதலமைச்சர், அவரை தனது இருக்கைக்கு அருகில் அமர வைத்து சிறிது நேரம் பேசினார். தனது விடுதலைக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சரிடம் பேரறிவாளன் வாழ்த்துப் பெற்றார்.

1 2 3 253