முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது புகார்

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அண்மையில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிகண்டன் தன்னை 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை சாந்தினி, தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார். இந்த புகார் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *