ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.மேலும் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனாலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி விடக்கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமாக உள்ளது. இதனால் தனது நாட்டின் சர்வதேச எல்லையை முழுமையாக திறக்காமல் உள்ளது.இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டேன் தெஹான் அளித்த பேட்டியின் போது அவரிடம் விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச எல்லைகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டேன் தெஹான் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடுத்த ஆண்டின் பாதிவரை முழுமையாக திறக்கப்படாமல் போகலாம். ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையேயான பயணம் மீண்டும் திறக்கப்படலாம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
