மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் வாழ்த்து

வரும் 7 ம் திகதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறார்கள். நடிகர் பிரபு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அருமை பெரியப்பா கலைஞர் வழியில் நின்று, கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் ஸ்டாலின். அப்பாவின் அடிச்சுவட்டில் அயராது மக்கள் பணியாற்றி, நல்லரசு நடத்திட வாழ்த்துகிறேன். முதன் முதலாக முதல்-அமைச்சர் பதவியில் அமருகின்ற அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு பிரபு கூறியிருக்கிறார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், களம் கண்ட முதல்-தேர்தலிலேயே வியக்கத்தக்க வெற்றி பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன், சட்டமன்ற உறுப்பினராக, வணக்கத்துக்குரிய மேயராக, துணை முதல்-அமைச்சராக பல நிர்வாக பொறுப்புகளை ஏற்று திறம்பட நடத்தி அனுபவங்களை சேகரித்து, இப்போது முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினின் வெற்றி வரலாற்று சாதனை என்றால் அது மிகையாகாது.

புதிதாக அமைய இருக்கும் தி.மு.க ஆட்சியில், உதய சூரியன் வரவால், தமிழ் திரை உலகில் படர்ந்திருக்கும் பல சோதனையான, வேதனையான இருள் விலகி புத்தொளி பிறக்கும் என நம்புகிறேன். ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்திருக்கும், தமிழக மக்களின் இதயங்களை வெல்லும், ஒரு நிறைவான-நிலையான- மகிழ்வான ஆட்சி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *