கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், உருமாறிய கொரோனா அதிதீவிரமாக பரவும் தன்மையுடையதாக இருப்பதாலும் வெளிநாட்டில் இருந்து பிரிட்டன் செல்லும் பயணிகளுக்கு, அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒன்றிரண்டு நாடுகளை ரெட் லிஸ்டில் இணைத்து அந்நாட்டு பயணிகள் வருவதற்கு தடைவிதித்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக இருந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அவர் பயணத்தை ரத்து செய்த உடனேயே, பயணத்தடைக்கான சிவப்பு பட்டியலில் இந்தியாவை இணைத்துள்ளது பிரிட்டன்.
இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளதால், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடையாது. வெளிநாட்டினருக்கு இங்கிலாந்தில் வீடு இருந்தால், அவர்கள் அதிகப்படியான பணம் செலுத்தி அரசு அனுமதி பெற்ற கோரன்டைல் ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது இந்திய நேரப்படி வருகிற வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது.‘‘இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்ப்பது கடினமானது. ஆனால் முக்கியமான முடிவை எடுத்துள்ளோம்’’ என இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா அதிகரிப்பாலும், டெல்லியில் ஒரு வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாலும் இங்கிலாந்து இந்த முடிவை எடுத்துள்ளது. இங்கிலாந்தின் ரெட் லிஸ்டில் வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளது.
