பிரேசில் வரலாற்றில் அதிபர் உடனான கருத்துவேறுபாடு காரணமாக முப்படை தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மறுத்து விட்டார்.இது அந்த நாட்டின் மீது கொரோனா வைரஸ் தனது கோரப்பிடியை இறுக்குவதற்கு வழி செய்தது. இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது.

அங்கு இந்த கொடிய வைரஸ் 3 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து உள்ளது. அதேபோல் 1 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய சவக்கிடங்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரி வளாகங்களில் உடல்கள் கிடத்தப்பட்டு உள்ளன.

நோயாளிகளுக்கான ‘ஆக்சிஜன்’ கையிருப்பும் வெகுவாக குறைந்துவிட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.அதிபர் ஜெயீர் போல்சனாரோவின் அலட்சியப்போக்கே கொரோனா நெருக்கடிக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், சுகாதார நிபுணர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கடந்த ஓராண்டாக அவரது செல்வாக்கு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த சூழலில் பிரேசிலின் வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த எர்னஸ்டோ அராஜுவோவின் செயல்பாடுகளால் பிற நாடுகளிடமிருந்து கொரோனா தடுப்பூசியை பெற முடியாமல் போனது என கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ மந்திரி பெர்னாண்டோ அசெவெடோ இ சில்வா பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து அதிபர் ஜெயீர் போல்சனாரோ தனது மந்திரி சபையை மாற்றி அமைக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.அதன்படி வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உள்பட 6 சக்தி வாய்ந்த துறைகளின் மந்திரிகளை மாற்றிவிட்டு புதிய மந்திரிகளை நியமித்தார்.இந்த நிலையில் நாட்டின் தரை, வான் மற்றும் கப்பல் ஆகிய முப்படைகளும் தனிப்பட்ட முறையில் அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென அதிபர் ஜெயீர் போல்சனாரோ தனக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாலேயே பதவியை ராஜினாமா செய்ததாக ராணுவ மந்திரி பெர்னாண்டோ அசெவெடோ இ சில்வா பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இது அந்த நாட்டு அரசியல் மட்டுமின்றி ராணுவத்திலும் பெரும் புயலை கிளப்பியது.இந்த நிலையில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ ராணுவத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டி முப்படைகளின் தளபதிகள் ஒரேநாளில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.‌ராணுவ தளபதி எட்சன் வீல் புஜோல், கப்பல் படை தளபதி ஆடம் இல்கஸ் பார்போசா மற்றும் விமானப்படை தளபதி அன்டோனியோ கார்லோஸ் பெர்முடெஸ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரேசில் வரலாற்றில் அதிபர் உடனான கருத்து வேறுபாட்டில் முப்படைகளின் தளபதிகள் ஒரே அணியில் நிற்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.இதனால் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *