மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.மியான்மர் ராணுவம் இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.இந்நிலையில்
மியான்மரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுகொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 91 பேர் கொல்லப்பட்டதாக மியான்மர் நவ் செய்தி போர்டல் தெரிவித்துள்ளது.மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனின் இன்சீன் மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் 21 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர ஒருவர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் கூறிய ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, அவரின் கூற்றுக்கு முரண்பாடாக இந்த மிருகத்தனமான தாக்குதல் நடந்து உள்ளது. மியான்மரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாடவிருப்பதால், அதற்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலையில் அல்லது பின்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என நேற்று முன் தினம் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து மியான்மரின் ஆயுதப்படை தினமான நேற்று உண்மையில் “வெட்கக்கேடான நாள்” என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்டக் குழுவான சிஆர்பிஎச்-ன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மியான்மர் ராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதேபோல் ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐ.நா. பொதுச்சபையும் மியான்மார் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்தன.இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெலாவேர் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், மியான்மர் ராணுவத்தின் செயல் முற்றிலும் மூர்க்கத்தனமானது. மிகவும் மோசமானது. எனக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் முற்றிலும் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.