மும்பை மருத்துவமனையில் தீ விபத்து 10 கொரோனா நோயாளிகள் பலி பலர் படுகாயம்

மும்பை பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கீழ்தளத்தில் உள்ள வணிக வளாகத்தில் பிடித்த தீ, மேல் தளங்களில் உள்ள மருத்துவமனைக்கும் பரவியது.

மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. தீ பரவியதும் அந்த கருவிகளில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.70 கொரோனா நோயாளிகள் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மும்பையில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் மேல்தளங்களில் சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

தீயில் சிக்கியவர்களில் 2 கொரோனா நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சிலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்து, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *