இலங்கை தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்த அதிமுக – பாஜக, கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் -ப.சிதம்பரம்

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்த செயலினை கண்டித்த காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பச்சை துரோகம் செய்த அதிமுக – பாஜக, கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில், நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில், வாக்கெடுப்பு நடந்தது. இதில், 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதை அடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பி.யுமான ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது; ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல். இச்செயல் ஒன்றே போதும், அதிமுக-பா.ஜ., கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழகம் தரவேண்டும். வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *