ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.
கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.இந்நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார் .மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: “நடிகர் ‘தீப்பெட்டி’ கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வறையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.