அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் கமலா ஹாரிஸ் (வயது 56). தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.இவரது அதிகாரபூர்வ இல்லம், வாஷிங்டன் நகரில் ‘தி நேவல் அப்சர்வேட்டரி’ (கடற்படை கண்காணிப்பு இல்லம்) என அழைக்கப்படுகிறது.இந்த இல்லத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இதன் காரணமாக அவர் இந்த அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்காமல், அமெரிக்க ஜனாதிபதியின் மாளிகையான வெள்ளை மாளிகையில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிளேயர் மாளிகையில் கணவர் டக்ளஸ் எம்.ஹாப் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் துணை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான கடற்படை கண்காணிப்பு இல்லத்தின் வெளியே நேற்று முன்தினம் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார்.

அவரை உடனடியாக அமெரிக்க ரகசிய சேவை போலீஸ் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக வாஷிங்டன் பெருநகர போலீசார் வசம் ஒப்படைத்தனர்.உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் அவர் யார் என தெரிய வந்துள்ளது.அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆன்டனியோ நகரை சேர்ந்தவர், அவரது பெயர் பால் முர்ரே (வயது 31). அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரிடம் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச்செல்வது, துப்பாக்கியை எடுத்துச்செல்வது, பதிவு செய்யப்படாத வெடிமருந்துகளை வைத்திருப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பால் முர்ரே, கமலா ஹாரிசை குறி வைக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கடற்படை கண்காணிப்பு இல்லத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் கமலா ஹாரிஸ் இல்லத்துக்கு வெளியே துப்பாக்கியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *