இயற்கை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பின்னாளில் ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ்திரையுலகில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லட்சுமி நேற்று உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.