ஹாரி-மேகன் தம்பதியின் இனவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர்.இதற்கான காரணத்தை வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்த அவர்கள், சமிபத்தில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரேயின் நிகழ்ச்சியில் அதை வெளியிட்டனர். குறிப்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் அனுபவித்த சவால்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதாவது, திருமணமான புதிதில் அரச குடும்பத்தில் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இதனால் மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டதாக மேகன் அதிர்ச்சி குற்றச்சாட்டை தெரிவித்தார்.மேலும் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த மேகன் கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக அவர்கள் கூறியது உலகின் கவனத்தை இங்கிலாந்து அரச குடும்பத்தை நோக்கி திருப்பி இருக்கிறது.

ஒரு காலத்தில் இங்கிலாந்தின் காலனி நாடுகளாக இருந்த நாடுகள் இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கின்றன. ஹாரி-மேகனின் இந்த குற்றச்சாட்டுகள் இங்கிலாந்து அரச குடும்பத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இது தொடர்பாக அரச குடும்பத்தினர் யாரும் நேரடியாக பதிலளிக்காத நிலையில், இங்கிலாந்து ராணி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அரச குடும்பத்தினர் மீதான நிறவெறி புகார் அதிர்ச்சி அளிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில் ஹாரியின் சகோதரருமான வில்லியம் நேற்று முதல் முறையாக தனது தம்பி மற்றும் அவரது மனைவியின் இந்த நிறவெறி புகாரை மறுத்து உள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து அரச பரம்பரை ஒரு இனவெறி குடும்பம் அல்ல’ என்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்குப்பின் ஹாரியிடம் பேசினீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இல்லை’ என பதிலளித்த அவர், எனினும் அவரிடம் இது குறித்து பேசுவேன் எனவும் கூறினார்.ஹாரி-மேகன் தம்பதியின் இனவெறி குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளித்த அரச குடும்பத்து முதல் உறுப்பினர் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *