சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஹாங்காங் தொடர்பான வரைவு ஹாங்காங் ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல் – அமெரிக்கா

பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான இந்த போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்றதால், ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.இந்த நிலையில் ஹாங்காங்கில் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இதுதொடர்பான வரைவு திட்டத்தில், ‘தேசபக்தா்கள்’ மட்டுமே ஹாங்காங் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வது; ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகியைத் தோ்ந்தெடுக்கும் சீன ஆதரவு தேர்தல் குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது; அந்தக் குழுவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில் சீன அரசின் இந்த நடவடிக்கை ஹாங்காங் ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல் என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘ஹாங்காங்கின் சுயாட்சி ஹாங்காங்கின் சுதந்திரங்கள் மற்றும் ஜனநாயக செயல்முறைகள் மீதான நேரடித் தாக்குதல் இது. இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால் ஹாங்காங் ஜனநாயக நிறுவனங்கள் கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்தப்படும்’’ என்றார்.

மேலும் அவர் ‘‘ஜின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஹாங்காங் அடக்குமுறைகள் ஆகியவற்றில் சீனாவுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதில் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது’’ எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *