வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இந்தநிலையில், அவருக்கு உடல் நலத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது இந்நிலையில் வரும் 25-ந் தேதி ஜாமீன் முடிகிறது.தற்போது அவரது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு தண்டனையை ரத்து செய்வது குறித்து வங்காளதேசத்தின் ஷேக் ஹசினா அரசு பரிசீலனை செய்கிறது.இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசதுஸ்ஸாமான் கான் கமல் கூறுகையில், “வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியாவின் தண்டனையை ரத்து செய்து, விடுவிப்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதையொட்டி அவரது சகோதரர் சமீம் இஸ்கந்தரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்” என தெரிவித்தார்.இதனால் கலீதா ஜியாவின் தண்டனை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.