இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளம் தயார் செய்யப்பட்டதா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டி 2 நாட்களிலேயே முடிவடைந்தது. ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே ஸ்கொயராக சுழற்பந்து டர்ன் ஆகும் வகையில் தயார் செய்யப்பட்டதாக விமர்சனம் எழும்பியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அகமதாபாத் ஆடுகளம் குறித்து கூறுகையில் ‘‘3-வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தியது போன்ற ஆடுகளத்தில் விளையாட வேண்டுமா? ஆடுகளம் மிகப்பெரிய அளவில் டர்ன் ஆகியது. போட்டி 2 நாட்களில் முடிவடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதுபோன்ற சாதகம் மிகவும் அதிகமானது. இந்தியா 400 ரன்கள் அடித்து இங்கிலாந்து 200 ரன்னில் ஆட்டமிழந்தால், இங்கிலாந்து மோசமாக விளையாடியது என்று கூறலாம். இந்தியா 145-க்குள் ஆட்டமிழந்தது.

இந்தியா மிகப்பெரிய, சிறந்த அணி. இந்தியா இங்கிலாந்தை இன்னும் வெல்ல முடியும் என்பதால், நியாயமான விளையாட்டு, நியாயமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். இந்தியா பயப்பட வேண்டியதில்லை. இந்தியாவுக்காக இப்படிபட்ட ஆடுகளம் தயார் செய்ய வேண்டியதில்லை.

அடிலெய்டில் இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளம் தயார் செய்யப்பட்டதா? மெல்போர்னில் இந்தியாவுக்கு ஆதரவாக ஆடுகளம் தயார் செய்தார்களா? அவர்கள் எப்படி தொடரை வென்றார்கள். நியாயமான ஆடுகளம், கண்டிசனில் விளையாடினால் எங்கே போட்டி நடந்தாலும் வெற்றி பெறலாம்’’ என்றார்.இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது. இன்றைய மைதானமும் சுழற்பந்து டர்ன் ஆகும் வகையில் இருந்ததால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *