தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3 ஆவது அணி அமையும்-கமல்ஹாசன்

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3 ஆவது அணி அமையும் என்று அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது: என் மொழி மற்றும் அடையாளத்தை அழிக்க நினைப்பவா்கள் நல்லவா்களாக இருக்க முடியாது. தலைவா்  என அழைக்கப்படும் நபா் தொடா்ந்து அரசியலை கவனித்து வருகிறாா். அதனால் வாய்ப்பு இருக்கிறது, என் பின்னால் வாருங்கள் என்று அழைக்கவில்லை. வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றே அழைக்கிறேன்.

முதல்வராக எம்ஜிஆா் இருந்தபோது விரும்பிய நேரத்தில் அவரைப் பாா்க்க முடிந்தது. தற்போது ஆள்பவா்களைப் பாா்க்க முடிவதில்லை. கோபத்தால் அரசியலுக்கு வந்தவன் என்று கூறுவது தவறு. மக்கள் அன்பு மற்றும் அழுகையாலே அரசியலுக்கு வந்தேன்.பிரதமா் மோடிக்கு 7 முறை கடிதம் எழுதினேன். ஆனால் ஒரு முறை கூட அவரைச் சந்திக்க முடியவில்லை. தமிழனுக்கு மரியாதை கிடைப்பது இல்லை என்றாா்.பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ரஜினியைச் சந்தித்தபோது, இரண்டு நண்பா்கள் என்ன பேசுவாா்களோ அதைப் பேசினேன். அரசியல் பேசவில்லை. இருவரும் மாறிமாறி நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் இருந்தோம். காலில் நானும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். இருவரும் பாா்த்து நீண்ட நாள்களாகிவிட்டன. அதன் அடிப்படையில் சந்தித்துப் பேசினோம். அவ்வளவுதான் பேச்சுத்தான் நடந்தது.

ரஜினிதான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டாா். உடல்நிலை சரியில்லை என்று கூறி பிறகு அவரை எப்படி அரசியலுக்கு அழைக்க முடியும். அது நல்ல நண்பனுக்கு அடையாளமாக இருக்க முடியாது. ஆனால் ரஜினி இன்னும் அரசியலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாா். கவனிக்க வேண்டியது எல்லோருடைய கடமையும் ஆகும். அவரும் கவனிக்க வேண்டும். கவனிக்காமல் விட்டதுதான் இந்த அவலத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறோம். அரசியலுக்கு வராமல் இருந்த 40 ஆண்டுகளாகக் கூட நான் அரசியலைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.

மநீம தலைமையில் 3 ஆவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத்தான் தோன்றுகிறது. அதற்கான மேகங்கள் கூடி வருவது தெரிகிறது. விரைவில் மழை பெய்யும்.கூட்டணியில் சோ்வதற்கு என்னிடம் நேரடியாக யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தூதுவிடுவது எல்லாம் அழைப்பு இல்லை. தலைமையிடம் இருந்து வரும் அழைப்பைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். மநீமவில் நல்லவா்கள் இணைய வேண்டும் என்றாா் கமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *