காதலிக்கு ஒட்டக குட்டியை பரிசளித்த காதலர் ஜெயிலில்

துபாயில் வசித்து வரும் அமீரக வாலிபர் ஒருவரின் காதலிக்கு காதலர் தினத்தையொட்டி பிறந்த நாள் வந்தது. எனவே, அன்று ஏதாவது ஒரு பரிசளிக்க வழங்க வேண்டும் என அவர் திட்டமிட்டார்.இதையடுத்து அந்த பகுதியில் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டக குட்டி ஒன்றை எடுத்து வந்து காதலிக்கு காதலர் தின பரிசாகவும், பிறந்த நாள் பரிசாகவும் கொடுத்தார். இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எனினும் இந்த ஒட்டக குட்டி எப்படி கிடைத்தது? என்பது குறித்து காதலி அவரிடம் கேட்கவில்லை.

இந்த நிலையில் ஒட்டக பண்ணையின் உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகம் ஒன்றின் குட்டி பிறந்து சில மணி நேரத்திலேயே காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.போலீசார் காணாமல் போன ஒட்டக குட்டியை தேடி வருவதாக தகவல் கிடைத்ததும் அமீரக வாலிபரும், அவரது காதலியும் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்கு பயந்து அந்த வாலிபர் காதலியிடம் இருந்த ஒட்டக குட்டியை வாங்கி அதனை திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார். அதன் பின்னர் போலீசுக்கு போன் செய்து ஒட்டக குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் நிற்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அந்த பண்ணைக்கும், அடுத்த பண்ணைக்கும் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.இந்த தூரத்தை கடந்து ஒட்டக குட்டி வர வாய்ப்பில்லை. எனவே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் ஒட்டக குட்டியை திருடி தனது காதலிக்கு காதலர் தின அன்பளிப்பாகவும், பிறந்த நாள் பரிசாகவும் வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் இதற்காக இரவு நேரத்தில் அந்த பண்ணைக்கு சென்று திருடியதாக கூறினார். இந்த திருட்டை மறைக்க பல்வேறு பொய்களை தெரிவித்ததாக கூறினார் .

இதனைத் தொடர்ந்து போலீசார் ஒட்டக குட்டியை திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தை பரிசாக பெற்ற காதலியையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *