தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது.எனினும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறியுள்ள ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆங் சான் சூகி உள்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராட்டங்கள் வெடித்துள்ளன.மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலே, தலைநகா் நேபிடாவிலும் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க ராணுவத்தினர் பயன்படுத்திய ரப்பர் குண்டுகளால் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டு உள்ள ஆங் சான் சூகி நேற்று முன்தினம் காணொலி காட்சி வாயிலாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வக்கீல் மற்றும் நீதிபதிகளின் கேள்விக்கு ஆங் சான் சூகி பதில் அளித்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ஆங் சான் சூகியின் மீது புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறுவோருக்கு சாதாரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்களின்படி, இந்த சட்டத்தை மீறுபவா்களை காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்.அதன்படி ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, அவரை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் காலவரையின்றி தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு வழிவகை செய்துள்ளது.இதற்கிடையில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டு இயற்றப்பட்டது என்றும் இது அவரின் மனித உரிமைகளை மீறும் செயல் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் ராணுவம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஸா மின் துன் தலைநகர் நேபிடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ராணுவம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது என்றும் ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தலைத் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சிக்கு அதிகாரத்தை ராணுவம் ஒப்படைக்கும் என்றும் உறுதிபடக் கூறினார். அதேசமயம் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.