மியான்மரில் டுவிட்டர் இணைய சேவையை முடக்கியது ராணுவ தலைமை-டுவிட்டர் நிறுவனம் கண்டனம்

மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் மியான்மர் அரசியலில் இராணுவம் இன்னும் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.இந்நிலையில் மியான்மர் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்றும் ராணுவ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.இந்நிலையில் அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வரும் 7 ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு மியான்மர் ராணுவம் தடை விதித்தது. இதன்படி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், முகநூல் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில் டுவிட்டர் சேவையும் மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு லட்சக்கணக்கான பதிவுகள் டுவிட்டரில் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக அந்நாட்டு தகவல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களில், “போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முக்கிய கருவியாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாட்டின் பொது நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை டுவிட்டர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *