மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் மியான்மர் அரசியலில் இராணுவம் இன்னும் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.இந்நிலையில் மியான்மர் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.இந்நிலையில் மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் நாட்டின் “ஸ்திரத்தன்மை” பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களிடம் போலியான செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.