தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.வரும் 27 ந்தேதி மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி திறக்க உள்ள நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவித்தார்.
இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. அதனை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் ரூ.68 கோடி செலுத்தப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது.அதன் பின் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீடு முழுவதும் வர்ணம் அடிக்கப்பட்டு என்னென்ன பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்று பட்டியலிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.
10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள இந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவு பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமை ஆக்கப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.வருகிற 28-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்க்கலாம்.