உலகிலேயே அதிக அளவில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்ற நாடு மெக்சிகோ. அங்கு பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கும் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Mexico-Police-1024x535.jpg)
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் வில்லாகிரான் என்ற நகரில் போலீசார் மற்றும் சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர் . இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.
அதனைத்தொடர்ந்து போலீசார் தங்களது துப்பாக்கிகளால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களும், போதைப்பொருள் மற்றும் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.