இறந்த முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை அங்கிருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த கோரச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜெய்ராம் (வயது 65) என்ற முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி நடந்தபோது அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பலத்த மழை பெய்ததால், உடல் தகன நிகழ்வில் பங்கேற்றவர்கள் உள்பட ஏராளமானோர் அங்குள்ள ஒரு கட்டடத்தில் ஒதுங்கி நின்றபோது அந்த கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததும், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.இந்த சம்பவத்தில் 23 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார்கள். இதில் பெரும்பலானவர்கள் ஜெய்ராமின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனவும் கூறப்படுகின்றது.அத்துடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு காசியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பங்கேற்றனர்.இதேவேளை அந்த கட்டிடம் கட்டுமான பணிக்காக பாவனையில் இல்லாமல் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.மேலும் சுடுகாடு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது