தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 396 ரன்கள் குவித்தது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அந்த அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டீன் எல்கர் 95 ரன்களும், எய்டன் மார்கிராம் 68 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது.
டு பிளிஸ்சிஸ் 55 ரன்களுடனும், டெம்பா பவுமா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் டு பிளிஸ்சிஸ், டெம்பா பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார்.
டெம்பா பவுமா 71 ரன்னில் வெளியேறினார். கேஷவ் மகாராஜ் 73 ரன்கள் அடிக்கவும், டு பிளிஸ்சிஸ் இரட்டை சதத்தை நோக்கி சென்றார்.
ஆனால் டு பிளிஸ்சிஸ் 199 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இறுதியில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 621 ரன் எடுத்தது . தென்ஆப்பிரிக்கா 142.1 ஓவரிகள் விளையாடியது. ஓவருக்கு சராசரியாக 4.37 ரன்கள் அடித்திருந்தது.
இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
225 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. குசால் பெரேரா 33 ரன்களுடனும், தினேஷ் சண்டிமல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. குசால் பெரேரா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். சண்டிமல் 25 ரன்னில் வெளியேறினார். வனிந்து ஹசரங்காவைத் (59) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதனால தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 199 ரன்கள் விளாசிய டு பிளிஸ்சிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.