கொரோனா நோய் பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமல்படுத் தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
பலர் சிகிச்சைக்காக அதிக பணம் செலவிடப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு உதவும் வகையில் நிவாரணம் வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்துக்கு பாராளுமன்ற அவை மற்றும் செனட் சபை ஆகியவை ஒப்புதல் அளித்தன. இறுதியாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால்தான் சட்டம் அமலுக்கு வரும்.
ஆனால் அதிபர் டிரம்ப் இந்த சட்டத்தில் கையெழுத்து போட மறுத்தார். கொரோனா நிவாரணம் போதுமானதாக இல்லை என்று கூறி கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால் அமெரிக்காவில் குழப்பமான நிலை ஏற்பட்டது. அடுத்ததாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனும் டிரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பல சட்ட நிபுணர்களும் டிரம்பின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.
இதையடுத்து டிரம்ப் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக அமெரிக்க மக்களுக்கு பெருமளவு நிவாரணங்கள் கிடைக்கும்.