தமிழகம்-புதுவை, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் புதுவை வந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ்சின்கா தலைமையில் துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ்குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணைய செயலர் மலேய் மாலிக் ஆகியோர் கொண்ட தேர்தல் ஆணைய உயர் மட்டக்குழுவினர் புதுவை அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.
பின்னர் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. , தி.மு.க. , இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ்சின்கா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு-புதுவையில் தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆராய்ந்தோம். வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை வாக்கு மையங்களிலும் நடத்த கூறியுள்ளோம்.
வீடுவீடாக சென்றும் வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யப்படும். தகுதியான வாக்காளர் பெயர் கண்டிப்பாக பட்டியலில் இணைக்கப்படும்.
வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் துணை வாக்கு சாவடிகளாக பிரிக்கப்படும்.
வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். கொரோனா தொற்றினை தடுக்க வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்படும்.
வாக்காளர்களுக்கு பரிசு, பணம் தருவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்தில் கொள்வோம். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்கு மொழி தடையில்லை. அவரது பணியையே முக்கியமாக கவனத்தில் கொள்வோம்.
இவ்வாறு உமேஷ்சின்கா கூறினார்.