ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

‘தமிழகம் காப்போம்’ என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் காணொலி காட்சி மூலம் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்

மு.க.ஸ்டாலின் கூறும் போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் ஊராட்சியில் இன்று காலை கிராமசபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். முன்னதாக காரில் வந்த மு.க.ஸ்டாலின் கிராமத்தின் வழியாக நடந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

அவருக்கு வழிநெடுக தி.மு.க. நிர்வாகிகள், கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிராம சபை கூட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தின் வழிநெடுக வாழை மற்றும் கரும்புகளால் தோரணம் கட்டப்பட்டு இருந்தன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

கிராம மக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசியதாவது:-

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடும் இயக்கம் தி.மு.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார். ‘நானும் ரவுடி ரவுடி’ என்று சொல்வது போல்தான் விவசாயி, விவசாயி என்று முதல்வர் கூறி வருகிறார்.

விவசாயி என கூறும் முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?

ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் கவர்னரிடம் அளித்துள்ளோம். இது பகுதி ஒன்றுதான்.

ஊழல் பட்டியலின் 2-வது பகுதி விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்படும். நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. முன்னாள் முதல்- அமைச்சரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் கொரோனா பேரிடர் நிதியிலும் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது.

கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை.

டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து பேசாதது ஏன்? அ.தி.மு.க. வை நிராகரிப்போம் என்பதை மக்கள் வரவேற்று உள்ளனர். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *