இலங்கை சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு – தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில்

சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.


எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது.
இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப் படுத்தப்பட வேண்டும்

என்றநிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இதன் அடிப்படையில் எமது கட்சியால் கோரிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

எமது கட்சியின் 2019 மாசி மாதம் இதற்காகவே நடத்தப்பட்ட பொதுக் குழுக் கூட்டதில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு,

அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராகிய நானும், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ,

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கையொப்பமிட்டு

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் இடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்களாக, இலங்கை அரசை விசேட சர்வதேச விசாரணை பொறிமுறையின் முலம் விசாரணைக்குட்படுத்தல் வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் வேண்டும்,


இலங்கைக்கு ஒரு விசேட அறிக்கையாளர் அமர்த்தப்பட்டு இவ்விடயங்கள் சம்பந்தமான அறிக்கைகள் சமர்ப்பித்து ஆராயப் படவேண்டும், கால அவகாசம் வழங்கலாகாது என்பன உள்ளடக்கம் பெற்றுள்ளன. இந்த நிலைப்பாட்டில் இருந்து ரெலோ பின்வாங்காது.

அண்மையில் சுமந்திரனால் விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாரும் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில், அது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். அந்த ஆவணம் எங்களிடம் கையளிக்கப் படவில்லை. அதன் உள்ளடக்கம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கும் பொழுது அதை கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூறுவது ஏற்புடையதல்ல.

இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட பொழுது சுமந்திரன் அவர்கள் அது சர்வதேச அமைப்புகளால் தயாரிக்கப்பட்டது, கருத்துக்களை கூறுமாறு குறித்த தலைவர்களிடம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இது கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பது அங்கத்துவ கட்சிகளாகிய நாங்களும் சேர்ந்து அறிவிக்கின்ற முடிவாக இருக்குமே தவிர தனிப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைய முடியாது என்பதையும் வலியுறுத்துகிறோம்.
இந்த விடயத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றும் எமது புலம்பெயர் மற்றும் சர்வதேச அமைப்புகளும் எல்லோரையும் உள்ளடக்கி ஒன்று படுத்திய கருத்துக்களை தயாரிப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
நம்முடைய இனத்தினுடைய கோரிக்கைகளை சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறச் செய்ய தாயகத்தில் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியம் என்பதை கருத்தில் கொள்ளவும் வேண்டுகிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *