தமது பரிந்துரைகள் என்று கூறி சுமந்திரன் எமக்குத் தந்த ஆவணத்தில் கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒரு கூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே.
அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
இவ்வாறு கூறுகின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது
சுமந்திரன் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம்.
ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும்.
நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார்.
அவர் கூறுவது சரியா அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரியா என்பதை அவரால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கடித வரைவை மொழி பெயர்த்தால் தெரிந்துவிடும்.
அவர் அனுமதி அளித்தால் குறித்த கடிதத்தை மொழி பெயர்த்துக் கொடுக்க முடியும்.
அதில் தமது பரிந்துரைகள் என்று கூறி முதலில் அவர் அங்கு கூறியிருப்பது
இலங்கை உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒரு கூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே.
அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
இதில் எந்த மயக்கமும் இல்லை.
அவர் தமது பரிந்துரைகளின் பின்னர் அதாவது பரிந்துரைகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்களினால் முன்னர் செய்த காரியங்களை அவர் குறிப்பிடுகின்றார்.
அதில் சிரியா பற்றியும் மியன்மார் பற்றியும் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்த நாடுகள் சம்பந்தமாகச் செய்தது போல் இலங்கை சம்பந்தமாகவும் பொறிமுறைகளை இயற்றுங்கள் என்று எங்குமே அவர் கூறவில்லை.
இதைத்தான் “அளாப்பிறது” என்று கிராமங்களில் கூறுவார்கள். சுமந்திரன் அளாப்புகின்றார்! ஆனால் எம்மிடம் இருந்து பதில் வர முன்னரே குறித்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் ஏனையோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.
எம்மிடம் எமது கருத்துக்களைக் கோரிவிட்டு அதற்கு முன்னர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியது.
ஆனால் இப்பொழுதும் அனைவரின் சம்மதத்துடன் புதியதொரு வரைவை அனுப்பலாம். அத்துடன் மைய நாடுகளுடனும் பேசவேண்டியிருக்கின்றது.
அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள். பொதுவாக இரண்டு விடயங்களைப் பலர் அடையாளம் கண்டுள்ளார்கள்.
ஒன்று ஐ.சீ.சி என்னும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது இலங்கைக்கென நியமிக்கப்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் முன் இலங்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனைச் சம்பந்தப்பட்ட ஒரு அங்கத்துவ நாட்டின் ஊடாகச் செய்ய வேண்டும். அடுத்தது சர்வதேச சுதந்திர விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவி அதைக் கொண்டு இலங்கையில் நடந்த மிக ஆபத்தான சர்வதேசக் குற்றங்களையும் சர்வதேசச் சட்ட மீறல்களையும் பற்றிய சாட்சியங்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுபடுத்தி,
பாதுகாத்து அவற்றை ஆய்வு செய்யவும் அவை தொடர்பாக உரிய கோவைகளைத் தயாரித்து சர்வதேசச் சட்ட முறைமைக்கேற்றவாறு நியமிக்கப்படும் நீதிமன்றங்களில் அல்லது தீர்ப்பாயங்களில் நடைபெறும் குற்றவியல்
நடவடிக்கைகளில் அக் கோவைகளைச் சமர்ப்பித்து நீதியும் சுதந்திரமானதுமான விசாரணைகளை விரைவாக நடத்த அனுசரணை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் சமாந்திரமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு போவது பற்றியும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையூடாக விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஆய்வாளர் ஒருவரை நியமிக்கக் கோரலாம்.
அதுமட்டுமல்ல. ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்பாடுகளை ஆராயுமாறும் கோரலாம். இவை பற்றி எல்லாம் ஆராய வெளிநாட்டு சர்வதேசச் சட்ட வல்லுநர்களுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன்.
மைய நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் தரப்பார் யாவரும் சேர்ந்து ஒரு கோரிக்கை விடுத்தால் நாம் அதன்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜெனிவாவில் இருக்கும் பிரித்தானியத் தூதுவர் கூறியுள்ளார்.
ஆகவே நாங்கள் மேலும் கால அவகாசம் கொடுக்காது, சுழடட ழுஎநச என்று முன்னைய கூட்டத் தீர்மானத்தையே பிறிதொருமுறை கொண்டுவராமல், இலங்கைக்கு எதிராக செய்ய வேண்டியவற்றை மைய நாடுகள் துணை கொண்டு செய்ய வேண்டும்.
அதற்கு சகல தமிழ்த் தரப்பாரும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும். எமது ஒற்றுமையே இந்தத் தருணத்தில் எமக்குப் பலமாகும்.