இலங்கையில் வட மேல் மாகாணத்திற்கு இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மீது பெரும் பணக்கார குடும்பங்களின் குழந்தைகளை கடத்தி சென்று மிரட்டி பணம் பறித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.
மேலும் 2009-ம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த 34 ஆண்டுகால போரின்போது சட்டத்திற்கு புறம்பாக நடந்த கொலை தொடர்பாகவும் இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் போராட்டத்தின் போது இவர் ஏராளமான தமிழர்களை கொன்று குவித்ததாகவும், இவர் மீது மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது.இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி நாட்களில் தமிழர்களுக்கு எதிராக கடுமையான துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டன. அப்போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.மேலும் வசந்த கரன்னகொடாவுக்கு எதிராக கொலை, சதி திட்டம் உள்பட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.கடந்த அக்டோபர் மாதம் இவர் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வசந்த கரன்ன கொடா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.