உலக அளவில் பெரு நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது. இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.
யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தில் விண்கலம் மிதந்தது. விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்தனர். விண்வெளியில் இருந்தபடி விர்ஜின் கேலடிக் குழுவினருக்கு பிரான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விண்கலம் சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி விமானம் போன்று தரையிறங்கியது. விண்கலத்தில் இருந்து வெளியே வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். இது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவம் என பிரான்சன் தெரிவித்தார். விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களையும் அறிவித்தார். இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.