27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற 7 பேரையும் விடுதலை செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்- வைகோ கோரிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யு மாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கவர்னருக்கு கோரிக்கை விடுத்தும், கவர்னர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர்.ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு ம.தி.மு.க. சார்பில் அன்போடு வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *