முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையில் ஏற்பட்ட வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்றது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது.
குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 39 ரன்களில் ஆட்டமிழந்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
அந்த வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. நாங்கள் பேட்டிங் செய்ய வந்த போது 60 ரன்களுக்கு மேல் முன்னிலையில் இருந்தோம். ஆனால், உடனடியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம்.
இரண்டு நாட்கள் சிறப்பாக ஆடி, போட்டியில் ஒரு நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், ஒரு மணி நேரத்தில் தோல்வி அடைந்து விட்டோம். இன்று இன்னும்கூட தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
முதல் இன்னிங்சிலும் அவர்கள் இதே வகையான பந்துவீச்சைத்தான் காட்டினார்கள். ஆனால், இன்று நாங்கள் ரன்கள் சேர்க்கும் அவசரத்தில் இருந்தோம் என நினைக்கிறேன். உண்மையில் சிறப்பான பந்துகளை எதிர்கொண்டோம்.
ஆனால், மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. மனநிலையில்தான் மாற்றம் என நினைக்கிறேன். அது வெளிப்படையாகத் தெரிந்தது. கண்டிப்பாக இன்றைய ஆட்டத்திலிருந்து கற்றுக்கொண்டு அணி வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=videoseries