சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐந்து ஆண்டு திருமண காலத்தின் போது செய்த பணிகளுக்கு, அந்தப் பெண் 50,000 சீன யுவானை இழப்பீட்டுத் தொகையாகப் பெறவிருக்கிறார்.பெண்கள் வீட்டில் செய்யும் பணிகளுக்கான மதிப்பு தொடர்பாக, இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் இந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு எனக் கூறுகிறார்கள்.சீனாவில் புதிய சிவில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.சென் என்கிற ஆண் வாங் என்கிற பெண்ணைக் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சென், தன் மனைவி வாங்கிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் என நீதிமன்ற விவரங்கள் கூறுகின்றன.முதலில் விவாகரத்ததுக்கு தயங்கிய வாங், பின் நிதி இழப்பீடைக் கேட்டார். சென் வீட்டு வேலைகளிலோ அல்லது குழந்தையை கவனித்துக் கொள்ளும் பணிகளிலோ பங்கெடுக்கவில்லை என வாதிட்டார் வாங்.
ஃபாங்சாங் மாவட்ட நீதிமன்றம், வாங்குக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. சென் மாதா மாதம் 2,000 சீன யுவானை ஜீவனாம்ச ஆதரவுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், அது போக 50,000 சீன யுவனை வாங் செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்பு, இந்த ஆண்டு முதல் சீனாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சிவில் சட்டங்களின் படி வழங்கப்பட்டிருக்கிறது.அப்புதிய சட்டத்தின் படி, விவாகரத்தின் போது கணவன் அல்லது மனைவி, குழந்தை வளர்ப்பு, வயதானவர்களை கவனித்துக் கொள்வது, தங்களின் மனைவி அல்லது கணவனுக்கு அவருடைய பணிகளில் உதவுவது போன்ற பணிகளை கூடுதலாகச் செய்ததற்கு இழப்பீடு கேட்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.