இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை தடுப்பதற்காக மத்திய அரசு எவ்வளவோ முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை.அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர்.இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்ஷய் குமார்,சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி,ரோகித் சர்மா உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர்.இந்நிலையில் ஐ.நா. சபையும் தனது கருத்தை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்திய அரசும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் டுவிட்டரில் கூறி இருப்பதாவது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். இரு தரப்பினரும் அமைதியை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் உரிமைகள் வழங்கும் வகையில் சமமான தீர்வுகளை கண்டறிவது மிகமுக்கியம் என்று தெரிவித்துள்ளது.