உலக சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், வௌவாலிடமிருந்து வேறு ஏதேனும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பு தயாரித்திருக்கும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அசோஸியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது கொரோனா பரவியதற்கு 4 சூழ்நிலைகளை சொல்லலாம். முதலாவது, வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.இரண்டாவது, வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்கலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவது, குளிரூட்டப்பட்ட உணவு பொருட்கள் வழியாக பரவி இருக்க சாத்தியம் உள்ளது. ஆனால், அப்படி நடந்திருக்காது.நான்காவது, பரிசோதனை கூடத்தில் இருந்து கசியும் சூழ்நிலை. ஆனால், அதற்கு சிறிதுகூட சாத்தியம் இல்லை.கொரோனாவை உண்டாக்கும் வைரஸ் போன்ற ஒரு வைரஸ், வவ்வாலிடம் கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோன்ற வைரஸ்கள், எறும்புத்தின்னி, கீரி, பூனைகள் ஆகியவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகர சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதா என்பது குறித்து இந்த அறிக்கையில் எதுவும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை.அறிக்கை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார்.
