ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மியான்மரில் இதுவரை 235 பேர் சுட்டுக்கொலை

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.ஆனால் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக 6 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ராணுவ அரசுடன் ஒத்துழைக்க மறுத்து மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் 2 வாரங்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க ராணுவம் அடக்குமுறையை கையாளத் தொடங்கியது முதல் இப்போது வரை தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய ராணுவம் பின்னர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியது.ஆனாலும் மியான்மர் மக்கள் ராணுவத்தின் அடக்குமுறை கண்டு பயந்து ஓடி ஒளியாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேசமயம் ராணுவமும் சற்றும் ஈவு இரக்கமின்றி அவர்களை தங்களது துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி வருகிறது. இந்தநிலையில் மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றயதில் இருந்து இப்போது வரை ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் 235 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் உரிமை குழு ஒன்று தெரிவித்துள்ளது.வியாழக்கிழமை பலி எண்ணிக்கை 224 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *