புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்தார்.
நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவையைவிட்டு வெளியேறிய நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். தனது அமைச்சரவையும் ராஜினாமா செய்தாக கூறினார். இனி ஆளுநரின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
முன்னதாக புதுச்சேரி சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். எவ்வளவு இன்னல் வந்தாலும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது. மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.ஆனால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். முன்னாள் ஆளுநர் கிரண் பேடியும் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளார்கள்.
புதுச்சேரியை மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41 சதவீத வரி கொடுத்தார்கள். ஆனால் புதுச்சேரிக்கு 21 சதவீத வரி மட்டுமே கொடுத்தார்கள். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியும் டெல்லியும் நிதி கமிஷனில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றது. நாங்கள் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. இது துரோகம் இல்லையா? மத்திய அரசு செய்யும் துரோகத்தை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால், அது அவர்களை பாதிக்கும்.
ராஜினாமா செய்த பின் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான். நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தான் வாக்களிக்க உரிமை உண்டு. நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமையில்லை.என் மேலும் கூறினார்.