மெஸ்சியின் கனவு நனவானது- அர்ஜென்டினாவுக்காக முதல்முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.பார்சிலோனா கிளப்பை பல போட்டிகளில் வெற்றி பெறச்செய்து பட்டங்களை கைப்பற்றி மெஸ்சி சாதித்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பலமுறை கைப்பற்றிய அவரால் தனது நாட்டுக்காக முக்கிய போட்டிகளில் கோப்பை எதையும் பெற்றுக்கொடுக்க முடியாதது ஏக்கமாகவே இருந்தது.

மெஸ்சி ஆடிய கோபா அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டியில் 3 முறை அர்ஜென்டினா தோல்வியை தழுவியது. 2007-ல் பிரேசிலிடம் 0-3 என்ற கோல் கணக்கிலும், 2015 மற்றும் 2016-ல் பெனால்டி ஷூட்டில் சிலியிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

2014 உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான அணி ஜெர்மனியிடம் தோற்றது. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தான் மெஸ்சி தனது நாட்டுக்காக கோபா அமெரிக்க கோப்பையை பெற்றுக்கொடுத்து சாதித்துள்ளார். அர்ஜென்டினாவுக்காக முதல்முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்ததால் அவரது கனவு நனவானது.இதனால் அவர் போட்டி முடிவின் போது ஆனந்த கண்ணீர் வடித்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா கோபா அமெரிக்க கோப்பையை வெல்ல காரணமாக இருந்த கேப்டன் மெஸ்சியை சக வீரர்கள் அனைவரும் தூக்கி மகிழ்ந்து வெற்றியை கொண்டாடினார்கள்.இந்த போட்டித்தொடரில் சிறந்த வீரர் விருதையும், அதிக கோல் அடித்த வீரர் விருதையும் மெஸ்சி கைப்பற்றினார். அவரும், கொலம்பிய வீரர் லூயிஸ் டியாசும் தலா 4 கோல் அடித்துள்ளனர். மேலும் மெஸ்சி அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க உதவியுள்ளார்.17 வயதில் அர்ஜென்டினா அணிக்காக ஆடத் தொடங்கிய மெஸ்சியால் தனது 34-வது வயதில் தான் முக்கிய கோப்பயையை வெல்ல முடிந்தது. அவரது 6 வயதில் அர்ஜென்டினா கால்பந்தில் முக்கிய பட்டத்தை கைப்பற்றியது. அதன்பிறகு அர்ஜென்டினாவில் தற்போதுதான் சாதிக்க முடிந்துள்ளது.இந்த போட்டி முதலில் அர்ஜென்டினாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக பிரேசிலுக்கு மாற்றப்பட்டது. இறுதிப்போட்டிக்கு மட்டும் குறைந்த அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதால் அர்ஜென்டினா வீரர்கள் குதூகலம் அடைந்தனர். மைதானத்தில் அவர்கள் தங்களது வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.தென்அமெரிக்க கண்டத்தை பொறுத்தவரை கால்பந்தில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் பரம்பரை எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *