வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மனுதாக்கல் செய்து இருந்தார்.அவர் மட்டுமின்றி மொத்தம் 44 மனுக்கள் கொளத்தூர் தொகுதிக்கு மனு செய்யப்பட்டு இருந்தது. இன்று வேட்புமனுக்கள் காலை 11 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மனுவாக தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்தார்கள். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதேபோல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் உதயநிதி உள்பட 34 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உதயநிதி மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதேபோல் சென்னையில் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்களின் மனுக்கள் எதுவும் தள்ளுபடி ஆகவில்லை.