முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் அதிகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை. கோப்பையும் வெல்லவில்லை. 2 மாதங்களுக்கு பிறகு உள்ளூரில் நடந்து வரும் களிமண் தரை போட்டியான ஜெனீவா ஓபன் டென்னிசில் களம் இறங்கினார்.இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான பெடரர், தரவரிசையில் 75-வது இடம் வகிக்கும் பாப்லோ அந்துஜாருடன் (ஸ்பெயின்) மோதினார். 1 மணி 52 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். கடைசி செட்டில் 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பெடரர் அதன் பிறகு வரிசையாக 4 கேம்களை தவற விட்டு வீழ்ந்து போனார்.வெற்றிக்கு பிறகு 35 வயதான அந்துஜார் கூறுகையில், ‘பெடரரை வீழ்த்தியதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. முந்தைய நாள் அவருடன் மோத இருப்பது எனது கனவு என்று கூறினேன். இப்போது அவரை தோற்கடித்து இன்னொரு படி மேல் சென்று விட்டேன். இதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உடனடியாக எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்’ என்றார்.39 வயதான பெடரர் அடுத்து 30-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டு இருக்கிறார். ‘இந்த சீசனில் நான் மிக குறைந்த ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். எனது ஆட்டத்திறன் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். தற்போதைய நிலைமையில் பிரெஞ்ச் ஓபனை வெல்வது குறித்து நினைத்து கூட பார்க்க முடியாது. பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் நான் இல்லை’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *