மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை….

கே.வி.ஆனந்த் ஆரம்ப காலகட்டத்தில் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த், சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.இதையடுத்து மலையாள இயக்குனரான பிரியதர்ஷன், 1994-ல் மோகன்லால் நடித்த ‘தென்மாவின் கொம்பத்’ எனும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற வருமாறு பிசி ஸ்ரீராமை அழைத்துள்ளார். ஆனால் அவரோ வேறு படங்களில் பிசியாக இருந்ததால், தனது உதவியாளரான கே.வி.ஆனந்தை பரிந்துரை செய்துள்ளார். இப்படி எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட கே.வி.ஆனந்த், அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்று சாதித்து காட்டினார்.

இதையடுத்து, 1996-ல் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கே.வி.ஆனந்த், பின்னர் இயக்குனர் ஷங்கருடன் ‘முதல்வன்’ படத்தில் கூட்டணி அமைத்தார். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு ஷங்கருக்கு மிகவும் பிடித்துப்போனதால், ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ என அடுத்தடுத்த படங்களில் அவருடன் பணியாற்றினார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்த கடைசி படம் ‘சிவாஜி’ தான். ஏனெனில் அவர் அப்படத்திற்கு பின் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.2005-ல் வெளியான ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாவிட்டாலும், இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கிய ‘அயன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. சூர்யாவுக்கும் அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் 2009-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக அயன் அமைந்தது.

இதையடுத்து ஜீவா நாயகனாக நடித்த ‘கோ’ படத்தை இயக்கி வெற்றி கண்ட கே.வி.ஆனந்த் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பின்னர் சூர்யாவுடன் ‘மாற்றான்’, தனுஷுடன் ‘அநேகன்’, விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ போன்ற படங்களில் பணியாற்றிய கே.வி.ஆனந்த், கடைசியாக சூர்யா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்தை இயக்கி இருந்தார். இதன்பின் அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *