அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது.நள்ளிரவில் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த நபர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் பெட்எக்ஸ் நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 8 பேரில் 4 பேர் சீக்கியர்கள் என்பதும் அவர்களில் 3 பேர் பெண்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு சீக்கியர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அமெரிக்காவின் சீக்கிய சமூகத்தின் தலைவர் குரிந்தர் சிங் கல்சா கூறுகையில் ‘‘இது இதயத்தை நொறுக்கும் சம்பவம். இந்தத் துயர சம்பவத்தால் சீக்கிய சமூகம் பேரழிவுக்குள்ளானது’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.