புதுவை அரசியலில் திடீர் திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் இந்த கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியிலும் இணைந்து செயல்பட்டன.
இந்தநிலையில் திடீரென கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்ததுடன் ரங்கசாமியுடன் கூட்டணி குறித்து பேச முயன்றது. ஆனால் ரங்கசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பெரும்பாலானோர் பா.ஜ.க. கூட்டணியை விரும்பாததே ரங்கசாமியின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
பா.ஜ.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிப்பதை கூட உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே நேரடியாக ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகளை விட்டுக் கொடுப்பதாகவும், முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க சம்மதிப்பதாகவும் அமித்ஷா உறுதி அளித்ததாக தெரிகிறது. இதை ரங்கசாமி ஏற்றுக் கொண்ட நிலையில் மீதமுள்ள 13 தொகுதியை பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பிரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் அமித்ஷா பேசியதையடுத்து ரங்கசாமியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியே நீடிக்கும். எனவே சட்டமன்ற தேர்தலில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றாலும் அவர்கள் தயவு இன்றி யூனியன் பிரதேசமான புதுவையில் எதையும் சாதிக்க முடியாது என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
