தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலரை மார்ச் 30 ம்திகதி இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட பல இலங்கைதமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலை காணப்படுவதாக குடும்பத்தவர்களும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்களை ஜேர்மனி 30 திகதி நாடு கடத்தவுள்ளதாக மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.இவர்களில் 31 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மேலும் பலர் இங்கு தடுத்துவைக்கப்படலாம் எனவும் மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி , நோர்டரைஇன்வெஸ்டபாலன் மாநிலத்தின் பகுதிகளில் கைது செய்யப்பட்ட 29 தமிழர்கள் ட்ஸ்ஸல்டோர்ப் நகரத்தின் விமானநிலையத் தொகுதியிலுள்ள கட்டடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே ஸ்டூட்ட்கர்ட் எனுமிடத்திலும் சிலர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.யேர்மனிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியொன்றினூடாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டுமெனக்கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.