பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற தரமான படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.இவர் விரைவில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.