சீனாவில் தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் , சித்திரவதை மற்றும் அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சனை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது மேலும் “பத்திரிகையின் உண்மைத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை பிபிசி மீறியது” என குற்றம் சுமத்தி ஒளிபரப்பு நெறிமுறைகளை மீறியதாக பிபிசி உலக செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.பிபிசி உலக செய்தி சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கைக்கு, பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி டோமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், பிபிசி உலக செய்திகள் ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ் கூறுகையில், பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன்மூலம் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.